தரைப்பாலத்துக்கு பக்கவாட்டு தடுப்புக்கம்பிகள் வேண்டும்


தரைப்பாலத்துக்கு பக்கவாட்டு தடுப்புக்கம்பிகள் வேண்டும்
x

தரைப்பாலத்துக்கு பக்கவாட்டு தடுப்புக்கம்பிகள் வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சை 8-ம் கரம்பை பகுதியில் உள்ள தரைப்பாலத்துக்கு பக்கவாட்டு தடுப்புக்கம்பிகள் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தரைப்பாலம்

தஞ்சை 8-ம் கரம்பை பகுதியில் தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக ரெட்டிபாளையம், வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி, சிவகாமிபுரம், பூதலூர், தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.இதன்காரணமாக பாலம் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிவருகிறது. அதுமட்டுமின்றி தரைப்பாலத்தின் வழியாக காட்டாறு ஒன்று செல்கிறது. மழைக்காலங்களில் அதன் வழியே மழைநீர் பெருக்கெடுத்து ஓடும்.

பக்கவாட்டு தடுப்புக்கம்பிகள்

அந்த சமயத்தில் தரைப்பாலம் இருப்பதே தெரியாதபடி வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும். அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்துக்குள் விழுந்துவிடுவர். கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சையில் பெய்த மழையில் தற்போது காட்டாற்றில் மழைநீர் ஓடுகிறது.

இந்த நிலையில் தரைப்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் தடுப்புச்சுவரோ, தடுப்புகளோ அமைக்கப்படாமல் உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் விழுந்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் பக்கவாட்டு சுவர் அல்லது தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story