ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருந்தது. இதையடுத்து அங்கு பாபநாசம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவில் அங்குள்ள நொச்சிகுளம் பகுதியில் கரடிகள் வராமல் இருப்பதற்காக வனத்துறையினர் பட்டாசு வெடித்து கண்காணித்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள அடையகருங்குளம் பஞ்சாயத்து விநாயகர் காலனி, சிவசக்தி நகர், உல்லாச நகர், மந்தை காலனி, கல்சுண்டு காலனி பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே ஊருக்குள் புகுந்த கரடிகளை கூண்டு வைத்து பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று வலியுறுத்தி, அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரி, பாபநாசம் வனத்துறையினரிடம் கோரிக்கை மனு வழங்கினார். தொடர்ந்து பாபநாசம் வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர் அடையகருங்குளம் பஞ்சாயத்து பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.