அட்டகாசம் செய்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை ஊழியர்கள்


அட்டகாசம் செய்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை ஊழியர்கள்
x

பாலக்கோடு அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையை டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் கரும்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் தர்மபுரி மாவட்டம் பிக்கிலி வனப்பகுதி வழியாக பாலக்ேகாடு அருகே உள்ள ஈச்சம்பள்ளம் கிராமத்துக்கு வந்தன. பின்னர் 2 யானைகளும் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

மயக்க ஊசி

எனவே காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காட்டு யானைகளை பிடிக்க வனத்துறை சார்பில் கோவை மாவட்டம் டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை சின்னதம்பி வரவழைக்கப்பட்டு ஈச்சம்பள்ளி கிராமத்தில் தங்க வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர் ஈச்சம்பள்ளியில் உள்ள விவசாய நிலத்துக்கு ஒரு காட்டு யானை வருவதை அறிந்தனர்.

இதையடுத்து காட்டுயானையை பிடிக்க முடிவு செய்யப்பட்டு நேற்று அதிகாலை 3 மணி அளவில் கும்கி யானை விவசாய நில பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. அப்போது 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசிகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.

பிடிபட்டது

அந்தசமயம் காட்டு யானை விவசாய நிலத்துக்கு வந்ததும், கும்கி யானை அதனை மடக்கியது. அப்போது டாக்டர் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தினார். இதையடுத்து காலை 7 மணிக்கு யானை அங்கும் இங்குமாக சென்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானை பிடிபட்டது.

தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் யானையை பரிசோதனை செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் இணைந்து யானையின் மீது 'ரோப்'பை கட்டினர். பின்னர் கிரேன் எந்திரம் கொண்டு வரப்பட்டு சிறிது நேரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றப்பட்டது.

மக்னா யானை

பிடிபட்ட காட்டு யானை 20 வயதுடைய மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) என்றும், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்கப்பட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் மற்றொரு யானையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story