கட்டுமான பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினர்
ஓவேலியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு வந்த கட்டுமான பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கூடலூர்
ஓவேலியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு வந்த கட்டுமான பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கட்டுமான பணி
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் முடிவு செய்யப்படாத நிலம் செக்சன்-17 சட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வகை நிலங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் ஓவேலி பேரூராட்சி பகுதியிலும் கட்டுமானம் மேற்கொள்ள தடை அமலில் உள்ளது.
இதனால் சாலை, வீடுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கட்டிட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தற்காலிகமாக விதிவிலக்கு அளித்து உள்ளனர். இந்த நிலையில் ஓவேலி காந்திநகரில் உள்ள அம்மன் கோவில் உள்ள பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடங்கள் கட்டக்கூடாது என கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர்.
அனுமதி இல்லை
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக கழிப்பறைகள் கட்டப்படுகிறது. இதை வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். எனவே, கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குறிப்பிட்ட இடம் வன நிலமாக அரசின் பதிவேட்டில் உள்ளது. மேலும் கோவிலுக்கும், சம்பந்தப்பட்ட இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வன நிலத்தில் கட்டுமான பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்றனர்.