ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கியது


ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கியது
x

ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கி உள்ளது. இதனால் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது.

இதனால் மற்ற காலங்களில் குளு, குளுவென காணப்படும் ஊட்டியில் பனிக்காலத்தின்போது உறைபனி கொட்ட தொடங்கும். ஆனால் இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி பெய்தது.

அந்த வரிசையில் இந்தாண்டு பனிக்காலமும் ஊட்டியில் தாமதமாக தொடங்கியுள்ளது. அதாவது வழக்கத்தைவிட சுமார் 50 நாட்களுக்கு பிறகு தாமதமாக நேற்று முதல் ஊட்டியில் உறைபனி கொட்ட தொடங்கியது. இதன்மூலம் ஊட்டியில் உறைபனி காலம் தொடங்கி உள்ளது.

பொதுமக்கள் அவதி

இதன் காரணமாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தயம் மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து உறைந்து காணப்பட்டது. மரம், செடி, கொடி மற்றும் புற்கள் பச்சை நிறத்தில் பசுமையாக தெரிந்து வந்த நிலையில் தற்போது உறைபனி கொட்டி வெண்மையாக காட்சியளிக்கிறது.

மேலும் சாலையிலும், அதன் ஓரமும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடக்கிறது. இந்த உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகாலை வேளையில் பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. தோட்டம் உள்ளிட்ட வேலைகளுக்கு தொழிலாளர்கள் சென்று வேலை செய்யவும் கடும் அவதியடைந்தனர். அதேநேரத்தில் கடும் குளிர், பனியை சமாளிக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிகின்றனர். மேலும் சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்கின்றனர்.


Next Story