நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா பேச்சு


நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா பேச்சு
x

ஏழ்மையான மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா தெரிவித்தார்.

பெரம்பலூர்

நீதிபதிகளுக்கு புதிதாக குடியிருப்புகள்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை மூலம் மாவட்ட மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதிக்கு ரூ.98 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் குடியிருப்பும், சார்பு நீதிபதிக்கு ரூ.64 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் குடியிருப்பும், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதிக்கும், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதிக்கும் தலா ரூ.49 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் குடியிருப்பும் என மொத்தம் ரூ.2 கோடியே 63 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் 4 குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டது. அந்த நீதிபதிகளின் குடியிருப்புகளின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. குடியிருப்புகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு (போர்ட்போலியோ) நீதிபதியுமான மாலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது

விழாவிற்கு வந்திருந்தவர்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் வரவேற்றார். விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டார். விழாவில் நீதிபதி மாலா பேசியதாவது:- ஒருவரின் பணியும், வாழ்க்கையும் நன்றாக இருக்க இனிமையான இல்லம் அவசியம். ஒரு நீதிபதியின் இல்லம் இனிமையானதாக இல்லையெனில், அவரால் மறுநாள் நீதிமன்றத்தில் தனது நீதி வழங்கும் பணியை சரிவர செய்ய முடியாது. இல்லத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலையும், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அமைதியான சூழலும் இருந்தால் நீதிபதிகள் தங்களது நீதி வழங்கும் நடைமுறையில் சிறப்பாக செயல்பட முடியும். மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கு போதிய நிதியை ஒதுக்கி சிறப்பாக குடியிருப்புகளை கட்டிக்கொடுத்ததற்கு, அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது.

யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல

நமது நீதி பரிபாலனமுறையில் கீழமை நீதிமன்றங்கள் முதுகெழும்பு போன்றவை. கீழமை நீதிமன்றங்கள் மிகவும் கவனமுடனும், அதிக பட்ச நேர்மையுடனும் நீதி வழங்க வேண்டும். இங்கு யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. ஏழ்மையிலும், ஏழ்மையான மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நீதித்துறை அரசு நிர்வாகத்தின் மிக முக்கியமான ஒன்று. நாம் இன்று இருப்போம், நாளை இல்லாமல் போய்விடுவோம். ஆனால், நீதித்துறையும், நீதிமன்றமும் எப்போதும் இருக்கும். எனவே, நாம் இந்த துறையின் மேம்பாட்டுக்கு நம்மால் ஆன நல்லதை செய்து விட்டு செல்ல வேண்டும். அப்போதுதான் நாம் பிற்காலத்தில் நல்ல விதமாக நினைவு கூறப்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி முத்துகுமரவேல், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தனசேகரன், சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ராஜ மகேஷ்வர், நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதா சேகர், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர்கள் கவிதா (குன்னம்), பர்வதராஜ் ஆறுமுகம் (வேப்பந்தட்டை) மற்றும் வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story