வாடகை கேட்ட கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த கும்பல்


வாடகை கேட்ட கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த கும்பல்
x

பணகுடி அருகே, வாடகை கேட்ட கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி அருகே, வாடகை கேட்ட கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாடகை கார்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் வைராவிகிணறை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 31). இவர் அஞ்சுகிராமத்தில் சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி தூத்துக்குடி கந்தசாமிபுரம் ஆறுமுகம் மகன் கற்குவேல் அய்யனார் (27), தூத்துக்குடி மட்டக்கடை யாக்கோபு மகன் தாம்சன் (33), பணகுடி கலந்தபனை ஜேக்கப் மகன் அலெக்ஸ் பிரபாகர் (31) ஆகிய 3 பேரும் அஞ்சுகிராமம் சென்று ஜெனிபர் காரை வாடகைக்கு பேசி அழைத்தனர்.

பின்னர் தூத்துக்குடி, திசையன்விளை, கூடங்குளம் ஆகிய ஊர்களுக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் ஒரு வெள்ளை தெர்மாகோல் பெட்டியையும் வைத்திருந்தனர்.

பணம் பறிப்பு

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வாடகை கார் காவல்கிணறு காய்கறி மார்க்கெட் அருகே வந்தது. அப்போது| 3 பேரும், கார் டிரைவர் ஜெனிபரிடம் காரை நிறுத்தும்படி கூறினர். உடனே அவர் காரை நிறுத்தியுள்ளார்.

பின்னர் காரில் இருந்து 3 பேரும் இறங்கி வெள்ளை தெர்மாகோல் பெட்டியை தூக்கிக்கொண்டு புறப்பட்டனர். உடனே கார் டிரைவர் ஜெனிபர், அவர்களிடம் 3 நாள் கார் வாடகை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் டிரைவரை காருக்குள் தள்ளி அமுக்கி பிடித்து அவர் பையில் இருந்த ரூ.500-ஐ எடுத்துக் கொண்டனர். பின்னர் கழுத்தை நெரித்து, அரிவாளை காட்டி மிரட்டி உள்ளனர். அப்போது அவர் போட்ட கூச்சலை கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி ஜெனிபர் கொடுத்த புகாரின் பேரில் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்தார். தப்பிச்சென்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story