மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்


மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார்
x

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிறுமி பலியானார். அவருடைய தாயும், தாத்தாவும் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களது மகள் மாலாஸ்ரீ (வயது 7). நேற்று முன்தினம் மாலையில் பார்வதி தனது சித்தப்பா மாரப்பாவுடன், மகள் மாலாஸ்ரீயை அழைத்துக் கொண்டு இருதுக்கோட்டையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

நமிலேரி ஏரிக்கரையில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள், மாரப்பா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரப்பா, பார்வதி, மாலாஸ்ரீ ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாலாஸ்ரீ சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மாரப்பா, பார்வதி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இன்னொரு விபத்து

சூளகிரி அருகே உள்ள வரதாபுரத்தைச் சேர்ந்தவர் கூலியம்மா (வயது 81). இவர், ஓசூர் -கிருஷ்ணகிரி சாலையில் ஒமதேப்பள்ளி மின் வாரிய அலுவலகம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story