சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து சிறுமி பலி


சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து சிறுமி பலி
x

நெகமம் அருகே சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

5 வயது சிறுமி

திருச்சி மாவட்டம் லால்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). இவருடைய மனைவி பானுப்பிரியா (26). இவர்களுக்கு ஒரு மகனும், 5 வயதில் ஜனனி என்ற மகளும் உள்ளனர். பிரபாகரன் தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள ஆலாம்பாளையத்தில் தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி ஜனனி குளிப்பதற்காக, பானுப்பிரியா வீட்டில் வாட்டர் ஹீட்டர் மூலம் வாளியில் இருந்த தண்ணீரை சுட வைத்தார். இதையடுத்து சுடு தண்ணீரை வீட்டிற்கு பின்புறம் வைத்துவிட்டு, வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாக தெரிகிறது.

சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து பலி

இந்த நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சாதாரண தண்ணீர் என நினைத்து திடீரென சுடு தண்ணீர் இருந்த வாளிக்குள் ஏறி குதித்து விழுந்தாக தெரிகிறது. இதனால் அவள் சுடு தாங்க முடியாமல் வலியில் கதறினாள். இந்த சத்தம் கேட்டு வந்த சிறுமியின் பெற்றோர் அவளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெகமம் அருகே சுடு தண்ணீர் வாளிக்குள் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story