கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து சிறுமி பலி
கள்ளக்குறிச்சி அருகே தாய் குளிப்பதற்காக வைத்திருந்த கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்
கள்ளக்குறிச்சி
விவசாயி மகள்
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அய்யனார். விவசாயி. இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு அன்புமணி(வயது 7) என்ற மகனும், அன்புஸ்ரீ(4) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுதா, குளிப்பதற்காக வெந்நீரை ஒரு வாளியில் எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அன்புஸ்ரீ எதிர்பாரதவிதமாக வெந்நீர் வைத்திருந்த வாளிக்குள் தவறி விழுந்தாள். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய சிறுமியை சுதா மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
பரிதாப சாவு
அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவள் அனுமதிக்கப்பட்டாள். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி அன்புஸ்ரீ பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.