தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுமி பலி
வீட்டின் முன்பு விளையாடியபோது, தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் 3 வயது சிறுமி பலியானாள்.
செட்டிபாளையம்
வீட்டின் முன்பு விளையாடியபோது, தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் 3 வயது சிறுமி பலியானாள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3 வயது சிறுமி
கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் திருவண்ணாமலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு ஹர்சினி (3), ஹாசினி என்ற 2 குழந்தைகள் இருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஹர்சினி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தாள். பின்னர் அவள் திடீரென்று மாயமானாள். உடனே அவளை கல்பனா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தண்ணீரில் மூழ்கி பலி
அப்போது வீட்டின் முன்பு தரையில் பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் தொட்டிக்குள் பார்த்தபோது அங்கு சிறுமி ஹர்சினி தண்ணீருக்குள் மூழ்கியநிலையில் கிடந்தாள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் சிறுமி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்ணீர் தொட்டியில் ஓட்டை
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, முத்துக்குமார் வீட்டின் முன்பு தரையில் பதிக்கப்பட்டது பிளாஸ்டிக் தொட்டி ஆகும். அந்த தொட்டி மூடப்பட்டு இருந்தாலும், அதில் ஒருபுறம் ஓட்டை இருந்துள்ளது. அந்த ஓட்டை வழியாகதான் சிறுமி தவறி உள்ளே விழுந்துள்ளாள். அதற்குள் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறுமி மூழ்கி உயிரிழந்து இருக்கிறாள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.