தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெண் சாவு
தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெண் சாவு
கரம்பயம்:
பட்டுக்கோட்டை அருகே தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
வெளிநாட்டில் வேலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி தனமணி(வயது55). இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தனமணியின் தம்பி சந்திரசேகர்(50). இவர் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து விட்டு தற்போது சொந்த ஊரில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை சந்திரசேகர் திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்தார்.
கதறி அழுதார்
இது குறித்து அவரது அக்கா தனமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தனமணி குடும்பத்துடன் தனது தம்பி சந்திரசேகர் வீட்டுக்கு வந்து அவரது உடல் மீது விழுந்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். இருப்பினும் துக்கம் தாங்க முடியாமல் தனது தம்பியை நினைத்து தொடர்ந்து தனமணி கதறி அழுது கொண்டே இருந்தார். அப்போது அவருக்கும் திடீரென நெஞ்சுலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
பரிதாப சாவு
உடனே அங்கிருந்த அவரது உறவினர்கள் தனமணியை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெண் உயிரிழந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.