சிறுமிக்கு ரத்த புற்று நோய் பாதிப்பு
திருப்பத்தூர் அருகே ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரத்த புற்றுநோய்
திருப்பத்தூர் அருகே உள்ள தாதனவலசை கிராமம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மகள் ரித்திகா (வயது 12). இவர் இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முடித்து, 7-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். கோடை விடுமுறையில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு ரூ.16 லட்சம் செலவு ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
மத்திய, மாநில அரசின் காப்பீடு திட்டம் மூலம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நிலை உள்ளது. மீதி தொகையை எப்படி ஈடுகட்டுவது என்று ரித்திகாவின் பெற்றோர் தவித்து வருகிறன்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.