சிறுமியை பெங்களூரு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


சிறுமியை பெங்களூரு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
x

சிறுமியை பெங்களூரு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி

மணப்பாறையில்:

சிறுமி மாயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் ஊதுபத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டுச்சென்ற சிறுமி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறுமியின் தாய் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமியின் செல்போன் எண்ணை கொண்டு, அவரிடம் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் பெங்களூருவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களூரு விரைந்தனர்.

திருமணம் செய்வதாக கூறி...

அங்கு சிறுமியுடன் இருந்த 2 பேரை பிடித்த போலீசார், சிறுமியையும் மீட்டு மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய நபரான முபாரக் அலியை(வயது 32) வேலூரில் போலீசார் பிடித்து மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, அந்த சிறுமிக்கும், வேலூரை சேர்ந்த முபாரக் அலிக்கும் மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியை அவர் காதலிப்பது போல் ஏமாற்றியுள்ளார். மேலும் கடந்த 1-ந் தேதி மணப்பாறைக்கு வந்த அவர், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை ஏமாற்றி பெங்களூருவுக்கு பஸ்சில் அழைத்து சென்றுள்ளார்.

3 பேர் கைது

அங்கு அந்த சிறுமிைய பலாத்காரம் செய்த அவர், தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த நியாஸ் (32), சதாம் உசேன் (28) ஆகியோரிடம் அந்த சிறுமியை விட்டுவிட்டு பெங்களூருவில் இருந்து வேலூருக்கு சென்று விட்டார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நியாஸ் மற்றும் சதாம் உசேன் ஆகியோரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததும், பின்னர் அந்த சிறுமிைய ஊருக்கு அனுப்பி வைக்க முயன்றபோது, போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஏற்கனவே சிறுமி மாயம் என்று பதிவு செய்த வழக்கை சிறுமியை கடத்திச் செல்லுதல், வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாற்றம் செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருமண ஆசை காட்டி கடத்திச்சென்று சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story