காருக்குள் விளையாடிய சிறுமி மூச்சு திணறி பலி


காருக்குள் விளையாடிய சிறுமி மூச்சு திணறி பலி
x

காருக்குள் விளையாடிய சிறுமி அதற்குள் சிக்கி மூச்சுத்திணறி இறந்தாள்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர் மாரியப்பன்.

இவருடைய மனைவி கனகா. இவர்களுடைய மகள் சரண்யா (வயது 7). பள்ளக்கால் பகுதியில் கனகா தனது மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சரண்யா 1-ம் வகுப்பு படித்து வந்தாள். கனகா கூலி வேலை செய்து வருகிறார்.

காருக்குள் மயங்கினாள்

நேற்று முன்தினம் கனகா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார்.அப்போது கனகாவின் வீட்டின் அருகே பழனிகுமார் என்பவர் தன்னுடைய காரை நிறுத்தி இருந்தார். அந்த பகுதிக்கு சென்ற சிறுமி சரண்யா அங்கு நின்ற காருக்குள் ஏறி விளையாடியதாக தெரிகிறது. அதன்பிறகு கார் கதவை திறக்க முடியாமல் அவள் உள்ளேயே சிக்கி தவித்தாள். கார் கண்ணாடிகள் மூடி இருந்ததால் அவர் மூச்சு திணறி உள்ளேயே மயங்கி கிடந்தாள்.

பலி

மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த கனகா தனது மகள் சரண்யாவை காணாது திடுக்கிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பதறிப்போன கனகா அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த காரின் அருகில் சென்று பார்த்தார். அப்போது காருக்குள் சரண்யா மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை திறந்து காரில் இருந்த குழந்தையை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர், சிறுமி சரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதை அறிந்த கனகா கதறி அழுதார். கனகாவுக்கு சரண்யா ஒரே மகள் ஆவாள்.


Next Story