தலைமை ஆசிரியரை அறையில் வைத்து பூட்டிய மாணவியின் தந்தை
வாணாபுரம் அருகே தலைமை ஆசிரியரை அலுவலக அறையில் வைத்து பூட்டிய மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே தலைமை ஆசிரியரை அலுவலக அறையில் வைத்து பூட்டிய மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலாண்டு தேர்வு
வாணாபுரம் அருகே உள்ள மெய்யூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியைச் சேர்ந்த லதா (வயது 48) என்பவர் பணியாற்றி வருகிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 20-ந் தேதி காலாண்டு தேர்வை தனியாக அமர்ந்து எழுதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது.
கொலை மிரட்டல்
இதனையடுத்து மாணவியின் தந்தை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம், எனது மகளை எதற்காக தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தீர்கள் என்று கேட்டு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் தலைமை ஆசிரியரை அவரது அலுவலக அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று அறையில் பூட்டி வைக்கப்பட்ட தலைமை ஆசிரியரை மீட்டனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தலைமை ஆசிரியை லதா வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.