விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க சங்கிலி
விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட தங்க சங்கிலியை ஆட்டோ டிரைவர் மீட்டு கொடுத்தார்
கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது ரபீக். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை விமானநிலையத்தில் வந்தார். அங்கு அவர், பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டபோது கீழே தங்க சங்கிலி ஒன்று கிடந்தது. இதை பார்த்த அவர் அந்த தங்க சங்கிலியை எடுத்து கோவை விமானநிலைய டெர்மினல் மேலாளரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த தங்க சங்கிலியை தவறவிட்டது யார்? என்பது குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோட்டில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த முகமதுரபீக்கை விமானநிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகள் வெகுவாக பாராட்டினர்.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, முகமது ரபீக் மீட்டு கொடுத்த தங்க சங்கிலியை விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவர் தவற விட்டு இருக்கலாம். அது யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம். நகையை தவறவிட்ட பயணி உரிய அடையாளங்களை கூறி நகையை பெற்று செல்லலாம் என்றனர்.