அரசு பஸ் சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது


அரசு பஸ் சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது
x

திருவண்ணாமலை அருகே அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு பஸ் கவிழ்ந்தது

சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை வழியாக காஞ்சீபுரம் நோக்கி செல்லும் அரசு பஸ் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் திருவண்ணாமலைக்கு நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ் திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் அருகில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையில் நடுவே கட்டப்பட்டிருக்கும் தடுப்பு சுவற்றில் மோதியது.

தொடர்ந்து பஸ் நிற்காமல் அருகில் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

விபத்துக்குள்ளான அரசு பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

20 பேர் படுகாயம்

இதில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த நபர்களை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story