அரசு பஸ் கால்வாயில் கவிழ்ந்தது


அரசு பஸ் கால்வாயில் கவிழ்ந்தது
x

இறச்சகுளம் அருகே அரசு பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இறச்சகுளம் அருகே அரசு பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் டிரைவர் மற்றும் கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கால்வாய்க்குள் பாய்ந்தது

அருமநல்லூரில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் ஒரு அரசு பஸ் (4சி) புறப்பட்டு நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை டேவிட் ஆன்டணி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பத்மகுமார் பணியில் இருந்தார். அந்த பஸ் இறச்சகுளம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே திருப்பத்தில் திரும்பிய போது முன்னே சென்ற ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சானது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையோரம் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் ஒரு பயணி என மொத்தம் 3 பேரும் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டனர். பஸ்சுக்குள் இருந்தபடியே அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கித்தவித்த 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் படுகாயம்

பஸ் கவிழ்ந்த கால்வாயானது சுமார் 10 அடி ஆழம் இருந்தது. அதில் தண்ணீர் இல்லை. புதர் மண்டி கிடந்தது. இதனால் பெரும் சேதம் ஏற்படவில்லை. மேலும் இரவு நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் இல்லை. அதுவே கால்வாயில் தண்ணீர் சென்றிருந்தாலோ அல்லது புதர் இல்லாமல் பாறைகள் இருந்திருந்தாலோ உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். எனினும் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story