`பிரேக்' பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்
திருச்சியில் அரசு பஸ் `பிரேக்' பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து டிரைவர் பஸ்சை ரவுண்டானாவின் சுவரில் மோதி சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் பயணிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சியில் அரசு பஸ் `பிரேக்' பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து டிரைவர் பஸ்சை ரவுண்டானாவின் சுவரில் மோதி சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் பயணிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.
`பிரேக்' செயலிழந்தது
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணி அளவில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்திரம் பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ் திருச்சி கோர்ட்டு அருகே வந்தபோது பஸ்சின் வேகத்தை குறைப்பதற்காக டிரைவர் சகாய சவுரிமுத்து பிரேக் பிடித்தார். ஆனால் பஸ்சின் வேகம் குறையாமல் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர், பயணிகள் இதுபற்றி டிரைவரிடம் கேட்டபோது, பஸ்சில் பிரேக் செயலிழந்து விட்டதாகவும், பஸ்சை நிறுத்த முடியவில்லை என்றும் கூறினார். இதனால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா
ஆனால் டிரைவர் சகாய சவுரிமுத்து, யாரும் பயப்பட வேண்டாம் தைரியமாக இருங்கள் பஸ்சை எப்படியாவது நிறுத்தி விடுகிறேன் என்று கூறினார். உடனே டிரைவர் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சாலையில் சென்று கொண்டிருப்போர் மீது மோதாமல் இருக்கும் வகையிலும் சாமர்த்தியமாக திருச்சி கோர்ட்டு அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவின் சுவரில் மோதி பஸ்சை நிறுத்தினார்.
இதில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்தது. மேலும் 2 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.