அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியது; 65 பயணிகள் உயிர் தப்பினர்
அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதில் 65 பயணிகள் உயிர் தப்பினர்
திருச்சியில் இருந்து சேலம் எடப்பாடியை நோக்கி 65 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சை சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, மயிலம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 44) என்பவர் ஓட்டிச் சென்றார். திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குணசீலம் அருகே பஸ் வந்தபோது எதிரே சென்ற லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் பக்கவாட்டு சக்கரங்கள் மண்ணில் பதிந்து பஸ் சாய்ந்தபடி நின்றது. இதனால் பயணிகள் உயிர் பயத்தில் சத்தம்போட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை படிப்படியாக பஸ்சில் இருந்து இறக்கி மீட்டு சேலம் செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் உதவியுடன் பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து வந்த அரசு சொகுசு பஸ் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அன்று மாலை மீண்டும் ஒரு அரசு பஸ் பள்ளத்தில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.