கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பினர் உண்ணாவிரதம்


கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பினர் உண்ணாவிரதம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர் ஒன்றிய அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கப்பட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈட்டிய விடுப்பு சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரத யாத்திரை

உண்ணாவிரதத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர் ரெங்கராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

முன்னதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர் ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறுகையில், ''புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என அறிவித்து விட்டு இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு வஞ்சிப்பதை எடுத்துரைக்கும் வகையில் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ரத யாத்திரையை மேற்கொள்ள உள்ளோம்'' என்றார்.


Next Story