தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைக்க அரசு முடிவு


தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைக்க அரசு முடிவு
x

தமிழகத்தில் ரேஷன் கடைகளை ஒரே வடிவில் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கி வருகிறது. 2.15 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

இந்த ரேஷன் கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காணப்படுகின்றன. பல ஊர்களில் வாடகை கட்டிடங்களில் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அட்டைதாரர்களுக்கு ஒருங்கிணைந்த வசதிகள் கிடைப்பதில்லை. பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், வெயிலில் வரிசையில் மக்கள் நிற்க வேண்டியதுள்ளது.

புதிய தோற்றம்

தற்போது ரேஷன் கடைகளை நவீனப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு இணையதள சேவை வசதிகளை ஏற்படுத்த தகவல் தொழில்நுட்பவியல் துறை திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை கட்டும் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட சில கட்டிடங்களுக்கான முகப்பு வடிவத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் மேம்படுத்தி புதிய தோற்றத்துடன் வடிவமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளுமே ஒரே மாதியான வடிவில் இருக்கும் வகையில் அதற்கான மாதிரியை அரசு தேர்வு செய்துள்ளது.

அமைச்சர் தகவல்

அதற்கான மாதிரி கட்டிடத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார். அதுபற்றி அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படுவதோடு, அவை அனைத்தும் மாதிரி வரைபடத்தில் இருப்பது போல் புதிய பொலிவுடன் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் அமுதம் பல்பொருள் அங்காடிகளை, அமெரிக்காவில் உள்ள 'செவன் லெவன்' மால்களைப் போல உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story