அரசு வேலை வாங்கித்தருவதாக பெண்களை குறி வைத்து மோசடி கைதான வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல்


அரசு வேலை வாங்கித்தருவதாக  பெண்களை குறி வைத்து மோசடி  கைதான வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல்
x

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சேலம்

சேலம்,

அரசு வேலை

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி மோகனாம்பாள் (வயது 31). பட்டதாரியான இவர் அரசு வேலைக்கு முயற்சி மேற்கொண்டு வந்தார். இதை அறிந்த மல்லூர் அருகே உள்ள வெங்காம்பட்டியை சேர்ந்த தினேஷ் (30) என்பவர் மோகனாம்பாளை அணுகி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் ரூ.25 லட்சத்து 70 ஆயிரம் பணம் பெற்று உள்ளார்.

ஆனால் அரசு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றப்பட்டது குறித்து மோகனாம்பாள் மல்லூர் போலீசில் புகார் செய்தார். பின்னர் இந்த வழக்கு மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பட்டதாரி பெண்களை குறி வைத்து அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது.

பெண்களை குறி வைத்து மோசடி

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறும் போது கைது செய்யப்பட்ட தினேஷ் அரசு வேலைக்கு முயற்சி செய்யும் பெண்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். அதாவது அவர் பெரிய பணக்காரர் போலவும் எப்போதும் டிப்-டாப்பாக உடை அணிந்து இருப்பார். பின்னர் வேலை கேட்கும் பெண்களிடம் தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

ஆனால் பொது சேவையாக போலியான நபர்களை கண்டு யாரும் ஏமாந்து விடக்கூடாது என்றும், அதிகாரிகள் கேட்கும் பணம் மட்டு கொடுத்தால் அரசு வேலை வாங்கிக்கொள்ளலாம். தனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று நல்லவர் போல் முதலில் நாடகத்தை தொடங்கி பின்னர் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளார். அதன்படி பெண்களை குறி வைத்து பலரிடம் பணம் மோசடி செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது என்று கூறினர்.


Next Story