அரசு திட்ட பணி விளக்க சுவர் இடிந்து மாணவி கால்கள் முறிந்தது


அரசு திட்ட பணி விளக்க சுவர் இடிந்து மாணவி கால்கள் முறிந்தது
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM IST (Updated: 30 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அரசு திட்ட பணி விளக்க சுவர் இடிந்து விழுந்ததில் மாணவியின் கால்கள் முறிந்தது.

தேனி

மாணவிக்கு கால் முறிவு

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கற்பகவள்ளி. இந்த தம்பதிக்கு ரூபிகா (வயது 14), ரிதன்யா என்ற 2 மகள்களும், சிரஞ்சித் மகனும் உள்ளனர். ரூபிகா, ஆசாரிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றது.

பணிகள் முடிந்ததும், அதன் மதிப்பீடு, திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட திட்ட பணி விளக்க சுவர் சுமார் 5 அடி உயரத்தில் கட்டப்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று ரூபிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த விளம்பர சுவர் திடீரென இடிந்து ரூபிகாவின் கால்களில் விழுந்தது.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் கால்களில் பிளேட் வைக்கப்பட்டு, மாவுக்கட்டு போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஓடி ஆடி விளையாடி கொண்டிருந்த மகள் கால்கள் முறிந்து வீட்டில் படுத்த படுக்கையானதால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ, அரசு அதிகாரிகளோ இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று மாணவியின் பெற்றோர் கூறினர். இதனால் தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story