நுரையீரல் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும்


நுரையீரல் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும்
x

நாட்டறம்பள்ளி அருகே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

நுரையீரல் பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவருடைய மனைவி கலைவாணி (32). இவர்களுக்கு தியா (4), ஹர்ஷினி (1) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ஹர்ஷினி பிறந்த 3 மாதத்தில் நோய் தொற்று ஏற்பட்டு உடல்நிலை சரி இல்லாமல் போனது. 5 மாத காலமாக தொடர் சிகிச்சையில் குழந்தை இருந்துள்ளது. பின்னர் பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகி உள்ளது.

அரசு உதவ வேண்டும்

குழந்தையின் சிகிச்சைக்கு தற்போது வரை சுமார் ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். மேலும் வீட்டிலேயே குழந்தைக்கு உண்டான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் அனைத்து விதமான கருவிகளையும் வாங்கி வைத்துள்ளனர். மாதத்திற்கு நான்கு முறை வேலூரில் தனியார் மருத்துவமனைக்கும் சென்று வருகின்றனர்.

எனவே தமிழக அரசோ அல்லது மாவட்ட நிர்வாகமோ தனது குழந்தையின் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கலைவாணி கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story