வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும்
கூத்தாநல்லூர்:
திருத்துறைப்பூண்டியில் இருந்து சேந்தங்குடி வழியாக வடபாதிமங்கலத்திற்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பஸ்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் இருந்து சேந்தங்குடி வழியாக திருத்துறைப்பூண்டி வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனால் வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி, செருவாமணி, மாரங்குடி, திருநெல்லிக்காவல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திருத்துறைப்பூண்டி, ஆலத்தம்பாடி, கச்சனம் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர்.
மாலை நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை
இந்தநிலையில் மாலை நேரத்தில் இயக்கப்படும் பஸ் சேவை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு்ள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பஸ் சேவையை தினமும் மாலை 5 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து புறப்பட்டு சேந்தங்குடி வழியாக வடபாதிமங்கலத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பள்ளி-கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.