தமிழகத்தில் நடந்துவரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களை அரசு தடுக்க வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களை அரசு தடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
மூத்த அமைச்சருக்கும், ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தத்தில், ஆளும் தி.மு.க. நிர்வாகிகள் திருச்சி கண்டோன்ட்மெண்ட் காவல் நிலையத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உட்கட்சி மோதலில் போலீஸ் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறை உடனடியாக கைது செய்யாமல், மேலிடத்தின் அனுமதியைப் பெற்று மெதுவாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுகிறது.
தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை இப்போதுதான் தமிழகம் முதன்முதலாகப் பார்க்கிறது. மேலும், ஒரு அமைச்சருக்கு அவரது கட்சிக்காரர்களே கருப்புக் கொடி காட்டுவதும், ஆளும் தி.மு.க.வின் உள்ளாட்சி மேயர்கள் மற்றும் தலைவர்கள் மீதே உள்ளாட்சி மன்றங்களில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர்களே புகார் கூறுவதும், தமிழகம் முழுவதும் நடைபெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போலீஸ் நிலையத்தை தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து இடைநீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை முதல்-அமைச்சர் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.
தாக்கப்படுகிறார்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலம் என்ற ஊரில், கஞ்சா போதையில் மாமூல் கேட்டு வரும் ரவுடிகளால் அச்சமடைந்துள்ள ஒரு கடைக்காரர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தனது கடையின் கதவுகளில் கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால், இந்தக் கடை காலவரையறையின்றி மூடப்படுகிறது என்று எழுதப்பட்ட ஒரு காகித்தை ஒட்டி கடையை மூடி வைத்துள்ளார்.
தலைமையின் கட்டுப்பாட்டில் கட்சியினர் இல்லை. ஆட்சியாளரின் கட்டுப்பாட்டில் அதிகார வர்க்கம் இல்லை. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையினர் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் அல்லல்படுகிறார்கள். பெண் போலீசார் தி.மு.க. நிர்வாகிகளால் பொது வெளியிலும், போலீஸ் நிலையத்திலும் தாக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல், ஆளும் தி.மு.க. நிர்வாகிகளின் அராஜகம் போன்றவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்த வேண்டும். இல்லையெனில், இந்த ஆட்சியாளர்களால் தினமும் பாதிக்கப்படும் போலீசார், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திரண்டெழுவார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.