உண்மை தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும்


உண்மை தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும்
x

குட்கா விவகாரத்தில் வழக்குப்பதிய அனுமதிகோரி சி.பி.ஐ. கடிதம் குறித்து உண்மை தன்மையை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிம்கார்டுகள், போதைப் பொருட்கள் ஆகியவற்றை புழக்கத்தில் விடுபவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை முதலில் எடுக்கப்பட்டு உண்மை தன்மை நிரூபிக்கும் பட்சத்தில் பணிநீக்கம் வரை அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. தமிழக அரசை பொறுத்த வரை எந்த ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தையும் வேரூன்றுவதற்கு அனுமதிப்பது கிடையாது. நிச்சயமாக தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு அரசு ஆதரவு கொடுப்பது கிடையாது. வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஆபத்து என்றால் உடனடியாக முதலில் குரல் கொடுப்பது தமிழக முதல்-அமைச்சர் தான். குட்கா வழக்கில் தமிழக அரசு உரிய பரிசீலனை செய்து அடிப்படை காரணங்களை ஆராய்ந்து அது குறித்து நடவடிக்கை எடுக்கும். முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுகிறார்கள். தமிழக அரசு யாருடைய வீடுகளில் சோதனை நடத்தினோமோ, தற்போது அவர்களுடைய ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தான் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதற்கு இது பெரிய சான்று. குட்கா வழக்கில் சி.பி.ஐ. கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இது புதிய கடிதமா அல்லது கடந்த ஆட்சி காலத்தில் வந்த கடிதமா என்பதை நான் சென்னைக்கு சென்று ஆராய்ந்த பிறகு தான் கூற முடியும். இருப்பினும் அடிப்படை உண்மை தன்மை இருக்கும் என்றால் அரசு வழக்குப்பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story