நர்சிங் படிக்கும் பழங்குடியின மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நர்சிங் படிக்கும் பழங்குடியின மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நர்சிங் படிக்கும் பழங்குடியின மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி கட்டணம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி அரசு ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்பில் 40 சதவீதம், அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவிகளின் நர்சிங் படிப்புக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
அதன்படி இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் 2023-2024-ம் கல்வியாண்டில் செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து அவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில ஆகும் கல்விக்கட்டணம், புத்தக கட்டணம், விடுதிக்கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் என ஒரு மாணவிக்கு ரூ.70 ஆயிரம் முழுவதையும் அரசே ஏற்கும்.
பயன்படுத்தி கொள்ளலாம்
பழங்குடியின மாணவிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் செவிலியர் பட்டயப்படிப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் பயிற்சி கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ள பழங்குடியின மாணவிகள் மற்றும் கல்வி நிலையங்களில் செவிலியர் பயிற்சியில் சேர்ந்த மாணவிகள் தங்களின் விவரத்தினை திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம்.
பழங்குடியின மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் இத்திட்டத்தினை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.