அரசு வேலை வாங்கி தருவதாகரூ.10 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாகரூ.10 லட்சம் மோசடி
x

திண்டுக்கல் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக பெண்கள் உள்பட 3 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

வேலை வாங்கி தருவதாக...

திண்டுக்கல் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த கபிலன் மனைவி எலிசபெத் (வயது 42). பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இவருக்கு, சாணார்பட்டியை அடுத்த கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்த மணி (57) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அப்போது மணி தனக்கு அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அதன்மூலம் கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதை உண்மை என்று நம்பி எலிசபெத் மற்றும் அவருடைய உறவினர் ஆல்வின் சம்பத்குமார் ஆகியோர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6¼ லட்சம் கொடுத்துள்ளனர்.

இதேபோல் நத்தம் தாலுகா சமுத்திராபட்டியை அடுத்த எரக்காபட்டியை சேர்ந்த சுகுந்தாமேரிக்கு, கால்நடை பராமரிப்பு துறையில் வேலை வாங்கி தருவதாக மணி கூறியிருக்கிறார். இதனால் சுகுந்தாமேரி ரூ.3½ லட்சத்தை மணியிடம் கொடுத்தார்.

அ.தி.மு.க. பிரமுகர் கைது

ஆனால் 3 பேரிடமும் பணத்தை பெற்று கொண்ட மணி, வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து 3 பேரும் மணியிடம் தங்களுடைய பணத்தை திரும்ப தரும்படி கேட்டனர். ஆனால் மணி பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த 3 பேரும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். கைதான மணி, சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. மீனவர் அணியின் முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story