இரட்டை குவளை முறையை ஒழிப்பதுதான் அரசின் நோக்கம்-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
டீக்கடையில் இரட்டை குவளை முறையை ஒழிப்பதுதான் அரசின் நோக்கம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
அனுமதி மறுப்பு
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் படி அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதா? என மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. இது தமிழகத்தின் முதலாவது ஜல்லிக்கட்டு ஆகும். சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்னும் வரவில்லை.
இந்த நிலையில் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அது மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உரிய முன்னேற்பாடுகள் செய்யாததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டல் படி ஆன்லைன் மூலம் காளைகள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆன்லைன் மூலமாக மாடுபிடி வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை முதல் நாள் எடுக்க வேண்டும். அதேபோல் 50 மீட்டர் நீளத்திற்குள் காளைகள் வெளியே செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகளுக்கு உட்படுத்தாததின் காரணமாக ஜல்லிக்கட்டு நிறுத்தி வைக்கப்பட்டதே தவிர, தடை செய்யப்படவில்லை. எல்லா நிபந்தனைகளையும் ஒழுங்குபடுத்தி வர அறிவுறுத்தி உள்ளது. அனைத்தையும் ஒழுங்குபடுத்திய பின் அடுத்த நாளே ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு நடத்த அரசாங்கம் ஏற்கனவே அனுமதி அளித்து விட்டது. அதனால் அனைத்தையும் ஒழுங்குபடுத்திய பின் ஜல்லிக்கட்டு நடத்த முடியும். இல்லையெனில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிற்க புதுக்கோட்டை மாவட்டம் காரணமாக இருந்தது என அவப்பெயர் வந்து சேரும். எனவே தான் ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரட்டை குவளை முறை
டீக்கடையில் இரட்டை குவளை முறையை ஒழிப்பதுதான் அரசின் நோக்கம். இறையூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவத்தில் புலன் விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். குடிநீர் தொட்டி பிரச்சினையை திசை திருப்புவதற்காக கோவில் விவகாரம், இரட்டை குவளை முறை புகார் தெரிவித்ததாக கூறமுடியாது.
உத்தரபிரதேசம் மற்றும் பா.ஜனதா ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.