சென்னிமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலைக்காக அளவீடு செய்யும் பணிகள் தீவிரம்
சென்னிமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னிமலை
சென்னிமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறவழிச்சாலை அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
சென்னிமலையில் கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்கள், ஜவுளி நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் சரக்குகள் வாகனங்களில் ஏற்றுதல், இறக்குதல் போன்ற பணிகள் நடைபெறுவதால் சென்னிமலை நகரத்துக்குள் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். திருவிழா நாட்களில் சென்னிமலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரள மாநிலத்துக்கு செல்லும் பெரும்பாலான லாரிகள் சுங்கச்சாவடி கட்டணத்துக்கு பயந்து சென்னிமலை, காங்கேயம் மற்றும் பொள்ளாச்சி வழியாக இரவு, பகலாக சென்று வருகின்றன. இதனால் சென்னிமலை வழியாக பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது.
அளவீடு பணி
இது குறித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி அன்று தினத்தந்தியில் "போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னிமலை நகரம்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு அதில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னிமலையில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து சென்னிமலை - ஈங்கூர் ரோட்டில் இருந்து முத்தையன் கோவில் அருகே பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு, நாமக்கல்பாளையம் வழியாக சென்னிமலை நகரத்தை கடந்து காங்கேயம் ரோட்டை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதையடுத்து கடந்த சில நாட்களாக அளவீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 6 பேர் கொண்ட 2 குழுக்கள் சென்னிமலை - ஈங்கூர் ரோட்டில் இருந்து முத்தையன் கோவில் அருகே பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு, நாமக்கல்பாளையம் வழியாக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புறவழிச்சாலை அமைக்கும்போது பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிக்காமல் இருக்கும் வகையில் எவ்வாறு புறவழிச்சாலை அமைக்க முடியும் என்பது குறித்து இந்த அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. அளவீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்று விரைவில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.