கீழப்பாவூரில் பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்ற தாத்தா குளத்தில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்


கீழப்பாவூரில் பேரனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்ற  தாத்தா குளத்தில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

கீழப்பாவூரில், பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற தாத்தா குளத்தில் மூழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில், பேரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற தாத்தா குளத்தில் மூழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

பேரனுடன் சென்ற தாத்தா

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கீரைத்தோட்ட தெருவில் வசித்து வருபவர் சுடலையாண்டி நாடார் (வயது 70).

இவருடைய பேரன் அஸ்வின் (8). அங்குள்ள தனியார் பள்ளியில் அஸ்வின் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலை சுடலையாண்டி நாடார் தனது பேரன் அஸ்வினை ஊர் அருகே உள்ள குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்து சென்றார். அப்போது குளத்தில் உள்ள படித்துறையில் இறங்கி அஸ்வின் உடலில் பிளாஸ்டிக் கேனை கயிற்றால் கட்டி, நீச்சல் பழக தண்ணீருக்குள் அனுப்பியுள்ளார்.

குளத்தில் மூழ்கினர்

அப்போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் உடலில் கட்டி இருந்த கயிறு அவிழ்ந்து பிளாஸ்டிக் கேன் விலகியது. இதனால் அஸ்வின் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தான்.

இதை பார்த்த சுடலையாண்டி நாடார், பேரன் அஸ்வினை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராமல் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்ததும் ஓடி சென்று சிறுவன் அஸ்வினை காப்பாற்றினர். அதற்குள் சுடலையாண்டி நாடார் நீரில் மூழ்கி விட்டார்.

தேடும் பணி தீவிரம்

இதுபற்றி சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் குளத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த குளத்தில் சுடலையாண்டி நாடாரை இரவு 8 மணி வரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திரும்பி சென்றனர். இன்று (சனிக்கிழமை) மீண்டும் அவரை தேட இருப்பதாக தெரிவித்தனர்.



Next Story