பெரிய ஆட்டுமலை நீரோடையை சீரமைக்க வேண்டும்


பெரிய ஆட்டுமலை நீரோடையை   சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெரிய ஆட்டுமலை நீரோடையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

தண்ணீர்... மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே தண்ணீரை சேமிக்கவும், நீர் நிலைகளை உருவாக்கி, நீர்பாசன வழிமுறைகளை முந்தைய காலங்களில் திட்டமிட்டு செயல்படுத் தினர்.

ஆனால் அந்த கட்டமைப்புகள், தொடர்ந்து பராமரிக்கப் படாமல் சிதைந்து சேதமடைகின்றன. இதனால் தண்ணீருக்காக மக்கள் அலையும் நிலை உள்ளது.

தொடர்ந்து கண்டு கொள்ளாமல் விட்டதால் சில பகுதிகளில் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு விட்டன. மேலும் அவை தண்ணீர் இன்றி வறண்டு மணல்மேடாக காட்சி அளிக்கின்றன.

கல்கொத்தி வாய்க்கால்

கோவை குற்றாலத்துக்கு முன்னதாக சாடிவயல் சோதனைச் சாவடியில் இருந்து எதிரே மலைப்பாதையில் 8 கி.மீ. தூரம் சென்றால் கல்கொத்தி வாய்க்காலை காணலாம். அதற்கு தண்ணீரை கொடுக்கும் சிற்றோடைகளில் ஒன்றுதான் பெரிய ஆட்டுமலை நீரோடை. இது தமிழக-கேரள எல்லையில் உள்ளது.

மலை மேல் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பெரிய ஆட்டுமலை நீரோடை வடக்கு பகுதியில் உருவெடுத்து, தெற்கு நோக்கி புறப்பட்டு, மேற்கு நோக்கி பாய்ந்து நீர்வீழ்ச்சியாக இறங்கி கேரளாவில் இருக்கும் மலம்புழா அணைக்கு செல்கிறது. எனவே அங்குள்ள மக்கள் அதை ஓணம்புழா மண்வாய்க்கால் என்று அழைக்கிறார்கள்.

வாய்க்காலில் இருந்து செல்லும் தண்ணீர் நீர்வீழ்ச்சியாக கேரளாவுக்கு செல்லும் இடத்துக்கும் இடையே 2 கிேலா மீட்டர் தூரம் உள்ளது. மழைக்காலத்தில் பெரிய ஆட்டுமலை நீரோடை தண்ணீர் கிழக்கு நோக்கி பாய்ந்து, தமிழகத்துக்குள் இருக்கும் கல்கொத்தி வாய்க்கால் வழியாக கீழே வருகிறது.

முக்கிய நீராதாரம்

இதனால் மழை இல்லாத நேரத்தில் தமிழகத்துக்கு 20 சதவீதம் அளவுக்கும், கேரளாவுக்கு 80 சதவீதம் அளவுக்கும் தண்ணீர் செல்லும்.

இந்த நீரோடை மற்றும் சில சிறிய நீரோடைகளில் வரும் தண்ணீர் கல்கொத்தி வாய்க்காலில் கலந்து ஊத்துப்பள்ளம், முண்டந்துறை, நண்டங்கரை தடுப்பணைகளுக்கு வருகிறது. இதனால் அந்த தடுப்பணைகளின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.

இந்த வாய்க்கால் கேரள- தமிழக எல்லையில் திசை திரும்பும் இடத்தின் அருகே கல்கொத்தி பதி என்ற பழங்குடி மக்கள் வசித்த கிராமம் இருந்தது.

அங்கு வசித்தவர்கள், வாய்க்காலில் மரம், கல் விழுந்து அடைப்பு ஏற்பட்டால் உடனே அகற்றி வந்தனர். இதனால் தண்ணீர் தடையின்றி சென்றது.

மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர்

இந்த நிலையில், கல்கொத்தி பதி பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிக மாக உள்ளது. இதனால் அங்கு குடியிருந்த பழங்குடியின மக்கள், நண்டங்கரை தடுப்பணை அருகே மலையடிவார பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.

இதனால் மலைமேல் உள்ள பெரியஆட்டுமலை நீரோடையில் இருந்து கல்கொத்தி வாய்க்காலுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதற்கு நீரோடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் திசை மாறி சென்றதே காரணமாக கூறப்படுகிறது.

அந்த நிலை தொடர்ந்ததால் மழை இல்லாத காலத்தில் கல்கொத்தி வாய்க்காலுக்கு வந்த தண்ணீர் மெல்ல, மெல்ல குறைந்து விட்டது. தற்போது மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வருகிறது. எனவே அதை ஆதாரமாக கொண்டு இருந்த தடுப்ப ணைகளுக்கும் நீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. எனவே அந்த தடுப்பணைகள் வறண்டு காணப்படுகிறது.

அரசுக்கு அறிக்கை

இது ஒருபுறம் இருக்க, கடந்த 2006-ம் ஆண்டு, பெரிய ஆட்டுமலை நீரோடையில் தமிழக விவசாயிகள் கற்களை வைத்து அடைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதாகவும், இதனால் கேரளாவுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகள், அந்த நீரோடைக்கு சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

சீரமைக்க வேண்டும்

அந்த அறிக்கையில், ஓணம்புழா மண் வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தினால் கல்கொத்தி வாய்க்காலுக்கு வரும் தண்ணீரின் அளவு குறையாது, கேரளாவுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பெரிய ஆட்டுமலை நீரோடையை கவனித்து அதை சீரமைத்து, கல்கொத்தி வாய்க்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-

அதிகாரிகள் ஆய்வு

பெரியஆட்டுமலை நீரோடை தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி அப்போதைய கோவை தெற்கு தாசில்தார் வி.சுப்பிரமணியன் தலைமையில், அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மண்சரிவு மற்றும் அடைப்பு ஏற்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது.

மேலும் கற்கள், பாறைகள் வைத்து தடுத்தால், முற்றிலும் தண்ணீரே வராது. மழை காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்பது தெரியவந்தது. அங்கு ஆய்வு நடந்து 17 ஆண்டுகள் ஓடிவிட்டன. தற்போதும் அதே நிலையே நீடித்துக் கொண்டு இருக்கிறது.

முன்பு கல்கொத்தி பதியில் பழங்குடியின மக்கள் வசித்த போது வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்வார்கள். அவர்கள் மலையடிவாரத்துக்கு மாற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஓடி விட்டன.

இதனால் தற்போது அங்கு யாரும் செல்வது இல்லை. எனவே வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பெரியஆட்டுமலை நீரோடை பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

நீரோடையில் அடைப்பு இருந்தால் அதை அகற்றி கல்கொத்தி வாய்க்காலில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் சங்க தலைவர் ஆறுச்சாமி கூறியதாவது:-

யாரும் செல்வது இல்லை

மலைக்கு மேல் உள்ள பெரியஆட்டுமலை நீரோடைக்கு செல்ல வழித்தடம் இல்லை. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. அதோடு மனிதனின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் அட்டைப்பூச்சிகளும் அதிகமாக இருக்கிறது.

எனவே அங்கு யாரும் செல்ல முடியாத நிலை இருக்கிறது. பெரியஆட்டுமலை நீரோடையில் இருந்து கல்கொத்தி வாய்க் கால் தண்ணீர் 8 கி.மீ. தூரம் பயணித்து மலையடிவாரத்தில் உள்ள ஊத்துப்பள்ளம் தடுப்பணைக்கு வருகிறது.

அந்த தடுப்பணை நிரம்பினால், பெருமாள்கோவில் பதி அருகே உள்ள முண்டந்துறை தடுப்பணைக்கு தண்ணீர் செல்லும். தற்போது மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வருகிறது.

மற்ற காலங்களில் ஊத்துப்பள்ளம் தடுப்பணை வறண்டு மணல்மேடாக காட்சி அளிக்கிறது. இந்த தடுப்பணையை நம்பி 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன நிலங்கள் உள்ளன.

எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணைக்கு தண்ணீர் வருவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story