நினைத்தாலே இனிக்கும் பொங்கல் வாழ்த்து அட்டை காணாமல் போய் விட்டதே


நினைத்தாலே இனிக்கும் பொங்கல் வாழ்த்து அட்டை காணாமல் போய் விட்டதே
x

நினைத்தாலே இனிக்கும் பொங்கல் வாழ்த்து அட்டை காணாமல் போய் விட்டதே

திருப்பூர்

மண்ணுக்குள் புதைந்து போன மற்ற பொருட்களை விட, பொங்கல் வாழ்த்து அட்டைக்கு தனி மகத்துவம் இருந்தது. மற்ற பண்டிகைகளை எல்லாம் விட தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு வாழ்த்து அனுப்புதல் என்பது 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுவர் முதல் பெரியவர் வரை முக்கிய பங்கு வகித்தது.

காணாமல் போனவர்கள் பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்த தபால், தந்தி, ரேடியோ, கைக்கெடிகாரம், கோலிக்குண்டு, வாக்மேன் வரிசையில் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் இடம் பிடித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. மண்ணுக்குள் புதைந்து போன மற்ற பொருட்களை விட, பொங்கல் வாழ்த்து அட்டைக்கு தனி மகத்துவம் இருந்தது. பொங்கலுக்கு வாழ்த்து அனுப்புதல் என்பது முக்கியக்கடமையாக கருதப்பட்டது.

பொங்கல் வாழ்த்து அட்டைகள்

சாதாரண வாழ்த்துக்களா அவை. தேடித்தேடி பிடித்த அழகழகான படங்கள். பெரியவர்களுக்கு சாமி படம். குழந்தைகளுக்கு அனுப்ப குழந்தைகள் படம். நண்பர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்கள். இயற்கை காட்சிகள் என பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி, அதில் வெறும் பெயரை மட்டுமே எழுதுவது போதாது என்று மனதுக்குப் பிடித்த வாசகங்களையும், சொல்ல விரும்பும் செய்திகளையும் மாய்ந்து மாய்ந்து எழுதிய காலம். அம்மாவின் பாசம், அப்பாவின் அறிவுரை, அத்தை, மாமாவின் கரிசனம், நண்பனின் நக்கல், எல்லாவற்றுக்கும் மேலாக அத்தை மகளின் சிணுங்கல்... இப்படி எத்தனை உணர்வுகளை அவை தாங்கி வந்தன?.

பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்

அட்டையிலேயே துணுக்குகள், ஜோக்குகள், குட்டிக்குட்டி கவிதைகள், ஊர் நடப்புகள் என பலதரப்பட்ட மாடல்களில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்கி பொங்கல் வாழ்த்து சொல்லி அனுப்புவதில் இருந்த மகிழ்ச்சி அளவற்றது.

15 பைசா கார்டு முதல் 1 ரூபாய் ஸ்டாம்ப் கவர் வாங்கி தபாலில் அனுப்புவார்கள். இதனால் தபால் நிலையங்களில் வேலை அதிகமாக இருக்கும். பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு இருந்தே உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து, பொங்கல் வாழ்த்து வரும் என தபால்காரரை எதிர்பார்த்து காத்திருந்து, தபால்காரர் கொடுக்கும் பொங்கல் வாழ்த்தை பிரித்து பார்த்து மகிழ்ச்சியடைந்த நாட்களை இன்றும் மறக்க முடியவில்லை. அந்த பழைய பொங்கல் வாழ்த்து அட்டையை பாதுகாத்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நினைவுபடுத்தி மகிழ்ச்சியடைந்து, பொங்கல் வாழ்த்து அட்டையை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்.

இன்றைய நாகரீக காலத்தில் பொங்கல் பண்டிகை தொடங்கும் முதல் நாளில் செல்போனை எடுத்து வாட்ஸ்-ஆப் குருப்பிற்கு சென்று ஹேப்பி பொங்கல் என்ற ஒரு புகைப்படத்தை போட்டு அனுப்புவதும், அவர்கள் இரு கைகளை கூப்பி இருக்கும் படத்தை போட்டு நன்றி என ஒரு நிமிடத்தில் பொங்கல் திருநாளை முடித்து கொள்கிறார்கள். இன்றைய நாட்களில் பொங்கல் வாழ்த்து அட்டை என்ற அற்புதமான வழக்கத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம் என்பதை மறுக்க முடியாது.




Next Story