சிதம்பரத்தில் நடந்த குரூப்-2 முதன்மை தேர்வு வினாத்தாளில் குளறுபடி 30 நிமிடம் தாமதமாக தொடங்கியது


சிதம்பரத்தில் நடந்த குரூப்-2 முதன்மை தேர்வு வினாத்தாளில் குளறுபடி  30 நிமிடம் தாமதமாக தொடங்கியது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் நடந்த குரூப்-2 முதன்மை தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டதால் 30 நிமிடம் தாமதமாக தொடங்கி நடந்தது.

கடலூர்

சிதம்பரம்,

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு, முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 57,641 தேர்வர்கள் எழுத இருந்தனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் குரூப்-2 முதன்மை தேர்வுக்காக 1762 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக சிதம்பரம் தாலுகாவில் காமராஜர் மெட்ரிக் பள்ளி, ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சி.முட்லூர் கலைக்கல்லூரி, நிர்மலா மெட்ரிக் பள்ளி, ராகவேந்திரா கலைக்கல்லூரி உள்ளிட்ட 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

பதிவெண்களில் வேறுபாடு

இதையடுத்து தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு நேற்று காலை 8 மணி முதலே சென்று காத்திருந்தனர். பின்னர் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் சோதனை செய்த பிறகு, அனைவரும் தேர்வறைக்குள் சென்றனர். இதையடுத்து காலை 9.30 மணிக்கு தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தொடங்கியது.

இதில் காமராஜர் மெட்ரிக் பள்ளியை தவிர பிற மையங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்ததால் தேர்வர்கள், செய்வதறியாது திகைத்தனர். அதாவது வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் வேறுபாடு இருந்தது. இதுபற்றி தோ்வர்கள், தேர்வு மைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனால் தேர்வு தொடங்குவது தாமதமானது.

145 பேர் எழுதவில்லை

இதற்கிடையே இதுபற்றி அறிந்து வந்த சிதம்பரம் சப்-கலெக்டர் ஸ்வேதா சுமன், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் வருகை பதிவேடு மற்றும் வினாத்தாள்களில் உள்ள பதிவு எண்கள் சரி செய்யப்பட்டு, காலதாமதமாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வை 1,617 பேர் எழுதினர். 145 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பொது அறிவு பாடம்

இதேபோல் மதியம் 2 மணிக்கு நடந்த குரூப்-2 முதன்மை தேர்வுக்கான பொது அறிவு பாடத்திற்கான தேர்வும் ½ மணி நேரம் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story