சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே கோவிலுக்கு தாயுடன் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கை, கால்களை கட்டிப்போட்டு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஒரு அம்மன் கோவிலில் நேற்று மாலை பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 10 வயது மகளுடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அவர் அங்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த சிறுமி கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

இதனிடையே சிறிது நேரம் கழித்து அந்த சிறுமியின் தாய், சாமி கும்பிட்டு விட்டு மகளை பார்த்தபோது அவள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் காணாததைக் கண்டு திடுக்கிட்டார். பின்னர் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தேடினார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள அன்னதானக்கூடம் அருகில் அந்த சிறுமிக்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார். மஞ்சள் நிற வேட்டியும், நெற்றி நிறைய திருநீறும் பூசிக்கொண்டு சாமியார்போன்று இருந்த அந்த நபர் செய்த செயலை பார்த்து சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி

உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப்பிடித்து அவரது கை, கால்களை கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள், வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட அந்த நபர், கடந்த ஒரு மாதமாகவே சாமியார் வேடம் அணிந்தவாறு அந்த கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதியிலேயே சுற்றித்திரிந்து வந்துள்ளதாகவும், அவர் மேலும் சில சிறுமிகளிடம் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், அந்த நபரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story