அறுவடை செய்த நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அறுவடை செய்த நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அறுவடை செய்த நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நெல் அறுவடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து நெல் சாகுபடியை விவசாயிகள் தொடங்குகின்றனர். அதுபோல் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அருகே உள்ள சோழந்தூர், கழனிக்குடி, நாரல் சிங்கனேந்தல், மங்கலம், ஆனந்தூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் விவசாயிகள் நெல்சாகுபடி தொடங்கினார்கள்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் நெல் அறுவடை எந்திரம் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெற்களை பாதுகாப்பாக வைப்பதற்கோ காய வைப்பதற்கோ சரியான இடம் இல்லாததால் அதை சாலையில் போட்டு உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உலர வைக்கும் பணி
குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே மங்கலம், சிங்கநேந்தல், நாரணமங்கலம், கழனிக்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை சாலையில் போட்டு உலர வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது பற்றி கழனிக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜய் கூறியதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் சரிவர மழை பெய்யவில்லை. மழையே இல்லாததால் கழனிக்குடி, மாதவனூர், வைகை, சிங்கநேந்தல், எருமைப்பட்டி, சோழந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு அனைத்து ரக நெல் பயிர்களுக்கும் நல்ல விலை கிடைத்தது.
விலை அதிகரிப்பு
குறிப்பாக சோதி மட்டை ரக நெல்லுக்கு கடந்த ஆண்டு 66 கிலோ ஒரு மூடை ரூ. 950-க்கு மட்டுமே தான் விலை போனது. ஆனால் இந்த ஆண்டு இந்த பகுதியில் ரூ.1600 வரை விலை போகின்றது. அதுபோல் கடந்த ஆண்டு ஆர்.என்.ஆர் ரக நெல்மூடை ரூ.1150-க்கு மட்டுமே தான் விலை போனது.
ஆனால் இந்த ஆண்டு ரூ.1350 வரை விலை போகின்றது. டீலக்ஸ் ரக நெல் கடந்த ஆண்டு ரூ.1100 வரை மட்டுமே விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.1250 வரை விலை போகின்றது. நான் 3 ஏக்கரில் டீலக்ஸ் ரக நெல் பயிரிட்டிருந்தேன். மழையே இல்லாததால் டீலக்ஸ் ரக நெல் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கி தான் நெற்பயிரில் தண்ணீர் பாய்ச்சினேன். இதனால் இந்த ஆண்டு கூடுதலாகவே செலவானது. இவ்வளவு கஷ்டப்பட்டு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லை.
வழக்கமாக நல்ல மழை பெய்து தண்ணீர் இருக்கும் பட்சத்தில் ஒரு ஏக்கரில் 35 முதல் 40 மூடை வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் வெறும் 11 மூடை மட்டுமே தான் மகசூல் கிடைத்துள்ளது. இந்த விளைச்சல் மிகவும் குறைவுதான். அதுபோல் வியாபாரிகள் மூலம் தான் விவசாயிகளிடமிருந்து நெல்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதை அரசே நேரடியாக விவசாயிகளிடம் நெல்மூடைகளை கொள்முதல் செய்யும் பட்சத்தில் இன்னும் நல்ல விலை கிடைக்கும். கஷ்டப்பட்டு விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்யும் நெற்பயிர்களை அரசே வேளாண்மை துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.