தலைமை ஆசிரியை அறையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு


தலைமை ஆசிரியை அறையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
x

தலைமை ஆசிரியை அறையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டுபோனது.

திருச்சி

துவரங்குறிச்சி:

ரூ.3 லட்சம் திருட்டு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வளர்ச்சி குறித்த பல்வேறு பணிகளுக்காக, இங்கு பணியாற்றும் ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.3 லட்சம் வரை பெறப்பட்டது. பின்னர் அந்த பணத்தை பள்ளியின் தலைமை ஆசிரியை ஹேமலதா தனது அறையில் உள்ள ஒரு பீரோவில் வைத்துவிட்டு, நேற்று முன்தினம் மாலை பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது தலைமை ஆசிரியை அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த 3 பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் ஒரு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கணினி மானிட்டரும் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் உடனே துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முதியவருக்கு வலைவீச்சு

தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் கடப்பாரையை கொண்டு பூட்டை உடைத்து பள்ளிக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட முதியவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story