கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடியே கிடக்கும் சுகாதார வளாகம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக மூடியே கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளது.
இதில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள அதிகாரிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அலுவலக வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
வெளி பகுதியில் இருந்து வரும் பொதுமக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதார வளாகம் இல்லாதால் அவர்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.
இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த பணி முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தி கொண்டு இதனை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.