மந்தமாக நடைபெறும் சாலை பணியால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்


மந்தமாக நடைபெறும் சாலை பணியால் அல்லல்படும் மலைவாழ் மக்கள்
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

கல்வராயன்மலையில் மந்தமாக நடைபெறும் சாலை பணியால் மலைவாழ் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை ஒரு வளர்ந்து வரும் ஒரு நகரமாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்திற்கு சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் தலைநகரில் இருந்தும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன.

குறிப்பாக கல்வராயன்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்ளை வாங்க தினமும் வெள்ளிமலை பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கல்வராயன்மலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கரியாலூர் முதல் வெள்ளிமலை வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகிறது. சாலை அமைப்பதற்காக வெறும் ஜல்லிகள் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் தார் ஊற்றப்படவில்லை.

இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்ல தடுமாறுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களின் டயர்கள் தேய்மானம் ஆவதோடு, பஞ்சர் ஆகி வீண்செலவு ஏற்படுவதாக புலம்புகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை கொட்டி அதை எந்திரம் மூலம் அழுத்தம் கொடுத்து அமுக்க வேண்டும். தற்போது இந்த பணியை பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் செய்து வருகிறார்கள். மூங்கில் முள்ளைபோன்று கிடக்கும் ஜல்லிகள் பாதசாரிகளின் பாதங்களை பதம் பார்த்து விடுகின்றன. காலணி அணிந்தாலும் சாலையில் நடப்பதற்கு மிகவும் சிரமமாகவே உள்ளது. ஜல்லி கற்களின் மீது வாகனங்களை ஓட்டி செல்லும் போது குறுகிய காலத்திலேயே டயர்கள் தேய்ந்து பஞ்சர் ஆகி விடுகின்றன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் வேதனையை உணா்ந்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.


Next Story