கருணாநிதியின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; தி.மு.க.வினருக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்


கருணாநிதியின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்;     தி.மு.க.வினருக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதியின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் பொன்முடி தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

கருணாநிதி நூற்றாண்டு விழா பட்டிமன்றம்

தி.மு.க. மாநில ஆதிதிராவிட நலக்குழு, சிறுபான்மை நல உரிமைக்குழு பிரிவு மத்திய மண்டலம் சார்பில் மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு தி.மு.க.வின் ஆதிதிராவிட நலக்குழு செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆதிதிராவிட குழுவின் இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செ.புஷ்பராஜ் வரவேற்றார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாரியப்பன் கென்னடி, துரைசாமி, பொன்தாஸ், தசரதன், பரமானந்தம், அரூர் .ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கருணாநிதி வரலாறு...

சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலருமான க.பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெறும் சம்பிரதாயத்திற்காக நடைபெறும் விழா அல்ல. கருணாநிதியின் வரலாற்றை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை தான் தமிழ் வழிக்கல்வி. பியூசி படிப்புகளில் ஆங்கிலவழியில் இருந்தது.

அதைத் தொடர்ந்து கல்லூரிகளில் தமிழ் வழியில் கலைப் பாடப்பிரிவுகளை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா. அவரை தொடர்ந்து முதல்-அமைச்சராக வந்த கருணாநிதி அறிவியல் பாடப்பிரிவுகளையும் தமிழ்வழியில் படிக்கலாம் எனக் கொண்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளில் ஆங்கில வழியில் படித்தாலும் தமிழ்வழியில் தேர்வெழுதலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவரும் கருணாநிதி தான். பொறியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாமாண்டு படிப்புகளில் தமிழ், ஆங்கில மொழிப்பாடத்தை படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அதை செயல்படுத்தியவர் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

ஆயிரம் ஆண்டுகள் பேசும்

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், கருணாநிதி பிறந்தநாள் விழா நூறாண்டு மட்டும் பேசாது. ஆயிரம் ஆண்டுகள் பேசும். சிறுபான்மையினர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அவரது வழியில் தற்போதைய முதல்-அமைச்சரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

இதையடுத்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர்கள் வி.பி.ராசன், மருதூர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பட்டிமன்றம்

முன்னதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலருமான திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுத்தந்தது டாக்டர் கலைஞரின் அரசியல் பணியா, கலை இலக்கிய பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் அரசியல் பணியே என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், நாகநந்தினி, கலை இலக்கியப் பணியே என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயகுமார், கடலூர் தணிகைவேலன் ஆகியோர் பேசினார்கள்.

இந்த விழாவில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட திமு.க. பொருளாளர் ஜனகராஜ், நகரச் செயலாளர் சக்கரை, விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழுவைச் சேர்ந்த வேலு, இருசப்பன், ராஜீவ்காந்தி, ஓம்சிவசக்திவேல், சூப்பர் பழனி உள்ளிட்ட நிர்வாகிகள், தெற்கு மாவட்ட சிறுபான்மைநல உரிமைக்குழுவைச் சேர்ந்த டிஎன்ஏ. தமின், அக்பர், தோமினிக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் செல்வ. பிரேம்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் நன்றி கூறினர்.


Next Story