சிமெண்டு சாலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம்


சிமெண்டு சாலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம்
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:45 PM GMT)

அரும்பராம்பட்டு கிராமத்தில் சிமெண்டு சாலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிகாரிகள் நேரில் விசாரணை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரும்பராம்பட்டு ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் செலவில் வடிகால் வாய்க்கால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சிலர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி சாலையை பெயர்த்து எடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பன்னீர்செல்வம், ரங்கராஜன் மற்றும் உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைந்து வந்து சிமெண்ட் சாலை பெயர்த்து எடுக்கப்பட்ட இடத்தையும், வடிகால் வாய்க்காலையும் பார்வையிட்டனர். சாலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தியதோடு, திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ள அளவைவிட சாலையை நீளமாகவும், அகலமாகவும் அமைத்து கொடுத்த ஒப்பந்ததாரரை அதிகாரிகள் பாராட்டினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பவானிராஜீவ்காந்தி மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் கே.கே.ஆர்.ராஜீவ்காந்தி, மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர். மேலும் சிமெண்டு சாலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பவானிராஜீவ் காந்தி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சாலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story