வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. அவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மிக முக்கியமான பறவைகள் சரணாலயத்தில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து, மீண்டும் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு மலேசியா, பாகிஸ்தான், மியான்மர், இலங்கை,, ஆஸ்திரேலியா, கனடா, நேபாளம், அந்தமான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர்ணநாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற கூழாகடா, தண்டை வாயான், பாம்பு புத்திரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி வாத்து, தரை குருவி, கூழைக்கடா, சாம்பல் நாரை உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ளன.
வேடந்தாங்கல் ஏரிக்கரையில் மூங்கில் மரம், கடப்ப மரம் போன்றவை அதிகமாக உள்ளதால் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கும், கூடு கட்டி குஞ்சு பொரிக்கவும் ஏதுவாக உள்ளது.
இந்த ஆண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகை தொடங்கி விட்டதால் டேவந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. இங்கு பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5, கேமரா வாடகை ரூ.50 என வசூலிக்கப்படுகிறது.
மேலும் வனத்துறை சார்பில் ஏரிக்கரை மேல் தொலைதூரத்தில் உள்ள பறவைகளை பார்ப்பதற்கு பைனாகுலர் வசதி, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.