காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
கீழ்வேளூர் அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து நடந்த விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து நடந்த விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சரக்குவேன் கவிழ்ந்து விபத்து
பாலக்குறிச்சி அருகே ஓட்டத்தட்டை கிராமம் கட்டையன் படுகை தெருவை சேர்ந்தவர் அபூர்வம். இவர் தனது உறவினர்கள் 19 பேருடன், திட்டச்சேரி அருகே குத்தாலம் பகுதியில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேனை வடுகச்சேரியை சேர்ந்த கார்த்திகேசன் என்பவர் ஓட்டி சென்றார்.
இருக்கை ஊராட்சி கீழபெருந்தலைக்குடி பிள்ளையார் கோவில் அருகே வடுகச்சேரி- தேவூர் சாலையில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சரக்கு வேன், சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேனில் சென்ற 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி பெண் சாவு
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிவையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டத்தட்டை கிராமம் கட்டையன் படுகை தெருவை சேர்ந்த பரதன் மனைவி அமுதா (வயது 41) என்பவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் சென்றவர்களுக்கு விபத்து ஏற்பட்டு, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.