அகல்விளக்குகள் தயாாிக்கும் பணி தீவிரம்


அகல்விளக்குகள் தயாாிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அகல்விளக்குகள் தயாாிக்கும் பணி தீவிரம்

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அகல்விளக்குகள் தயாாிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அகல் விளக்குகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு வ. உ. சி. (குலாலர் வீதி) வீதி மண்பாண்டத் தொழிலில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இப்பகுதியில் தொடக்க காலத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால் மண்பாண்ட தொழில் நாளுக்குநாள்நலிவடைந்து வந்த காரணத்தால் தற்போது 2- க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் சீசனுக்கு ஏற்றவாறு மண்பாண்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

மண்பாண்ட பொருட்கள் தயாரிக்க கோவை கணுவாய் பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் இருந்து களிமண் கொண்டு வரப்படுகிறது. கோடைகாலத்தில் குடிநீர் பானைகள், தண்ணீர் ஜாடிகள், பாட்டில்கள், பூந்தொட்டிகளும், கோவில்களுக்கு தேவையான சாமி சிலைகள், பொம்மைகள், நேர்த்திக்கடன் செலுத்த குதிரை பொம்மைகள், விநாயகர்சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள். பொங்கல் பண்டிகையை யொட்டி பொங்கல் பானைகள் நவராத்திரி கொலு பொம்மைகள் கார்த்திகை மாதத்தில் அகல் விளக்குகள் தயாரிப்பு என சீசனுக்கு ஏற்றவாறு தங்கள் தொழிலை மாற்றி செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை தீப திருநாள் நெருங்குவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நலவிடைந்து வருகிறது

ஒரு முக விளக்கில் இருந்து தொடங்கி 9 முக விளக்கு வரையிலும் நந்தா விளக்கு என கண்ணைக் கவரும் பல்வேறு வடிவமைப்புகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கார்த்திகை மாத சீசனின் போது சுமார் 5 லட்சம் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அகல் விளக்குகள் தயாரிப்பதால் சுமார் 2 லட்சம் வரை அகல் விளக்குகள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மழை காரணமாக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்பாண்ட தொழில் செய்துவரும் எத்திராஜ் என்பவர் கூறியதாவது:- வ.உ.சி. வீதியில் முன்னர் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வந்தனர். போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மண்பாண்ட தொழிலை கைவிட்டு மாற்றுவேலைக்கு சென்றுவிட்டனர். மண்பாண்டத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் களிமண் மற்றும் விறகு ஆகியவற்றின் விலை உயர்ந்து விட்டதாலும் போதிய விலை கிடைக்காததாலும் நாளுக்கு நாள் இத்தொழிலை விட்டு செல்லக் கூடிய நிலை காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் மண்பாண்டத் தொழில் நலிவடைந்து விடும். நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாத்திட அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story