தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வாட்டி வதைக்கும் வெயில்
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கோடைகாலம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திேலயே தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதையொட்டி வனப்பகுதிகள் பசுமையை இழந்து வருவதுடன், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால் தண்ணீரை தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. மேலும் தேயிலை தோட்டங்களை பாதுகாக்க ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.
தீத்தடுப்பு கோடுகள்
இந்த நிலையில் வனப்பகுதி காய்ந்து வருவதால், காட்டுத்தீ பரவும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக காப்பு காடுகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
வால்பாறை வனச்சரகம் காடம்பாறை வனப்பகுதிக்குள் இருக்கும் மாவடப்பு கிராம பகுதியில் மலைவாழ் மக்களின் உதவியுடன் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று மானாம்பள்ளி வனப்பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது.
அறிவுரை
இது தவிர அந்தந்த வனச்சரக பகுதியில் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மலைவாழ் கிராம மக்கள் மற்றும் எஸ்டேட் பகுதி மக்களிடம் காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அட்டகட்டி, மளுக்கப்பாறை வனத்துறை சோதனை சாவடி வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அப்போது, சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வது, புகை பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.