விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம்:விவசாயியின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.6½ லட்சம் நகை- பணம் அபேஸ்மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் விவசாயியின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52), விவசாயி. இவர் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஒரு வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 பவுன் நகையை அடகு வைத்திருந்தார்.அந்த நகையை மீட்பதற்காக நேற்று பையூரில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் சீனிவாசன் விழுப்புரம் வந்தார். அவர், அந்த வங்கிக்கு சென்று, தான் அடகு வைத்த நகையை மீட்டார். பின்னர் அந்த நகையையும், கையில் மீதமிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு அதனை ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் வீதிக்கு சென்றார்.
நகை- பணம் அபேஸ்
அங்கு ஒரு வெள்ளி நகை விற்பனை கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வெள்ளிப்பொருட்களை வாங்குவதற்காக கடைக்குள் சென்றார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுப்பதற்காக வெளியே வந்து தனது ஸ்கூட்டரை பார்த்தபோது அதில் வைத்திருந்த நகை, பணம் இருந்த பை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தும் நகை, பணம் கிடைக்காததால் கதறி அழுதார். இதுகுறித்து அவர், அருகில் உள்ள விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், சீனிவாசன் ஸ்கூட்டரின் பெட்டியை நைசாக திறந்து அதிலிருந்த நகை, பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. பறிபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.6½ லட்சமாகும்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.