தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

மணவாளக்குறிச்சி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீன் தொழிலாளி

மணவாளக்குறிச்சி அருகே உள்ள பாலாற்றின்கரையை சேர்ந்தவர் சுபா. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சென்னையில் வேலை பார்த்தபோது, திருவாரூர் மாவட்டம் திருவண்டுதுறை தெற்கு தெருவைச் சேர்ந்த பூபாலன் (வயது37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பூபாலன் திருமணத்திற்கு பிறகு சுபாவின் ஊரான பாலாற்றின்கரையில் தங்கி முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பூபாலன் தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுபா அவரை கண்டித்து வந்தார். இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் பூபாலன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால், மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பூபாலன் வீட்டில் உள்ள மாடுகளை குளிப்பாட்டுவற்காக வள்ளியாறு தெற்கு பகுதிக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சுபா தனது மகனுடன் அவரை தேடிச் சென்றார். அப்போது, பூபாலன் குளித்துவிட்டு வருவதாக மனைவியிடம் கூறியுள்ளார். அதன்பிறகும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது, பூபாலன் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைக்கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சோகம்

பின்னர், இதுபற்றி பூபாலனின் அண்ணன் சுப்ரமணியன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story